சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரோடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோரின் நடிப்பில் ‘ஜகஜால கில்லாடி’ என்கிற படத்தைத் தயாரிப்பதற்குக் கடன் வழங்கக் கோரி தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் என்கிற நிறுவனத்தை அணுகினர்.
பல்வேறு தவணைகளாக 4 கோடி ரூபாய் கடன் பெற்ற நிலையில், 30 விழுக்காடு வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் எனவும் படத்தின் அனைத்து உரிமையும் தங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் 2018 அக்டோபருக்குள் படத்தை முடிக்க வேண்டும் எனவும் ஒப்பந்தம் போடப்பட்டது.
ஆனால் கடன் தொகையைத் திருப்பித் தராததை அடுத்து, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கில், நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை கையகப்படுத்த சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


