சென்னை: சென்னையில் இருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானச் சேவையில் ஆறு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.
ஏர் இந்தியா IX696 விமானம் புதன்கிழமை (ஜூன் 18) காலை 5 மணிக்குப் புறப்பட்டு முற்பகல் 11.55 மணிக்கு வரவேண்டியது.
ஆனால், ஏறத்தாழ ஐந்தரை மணிநேரம் தாமதமாக காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு சிங்கப்பூர் வந்தடைந்தது.
அதனால், சிங்கப்பூருக்கு வரவேண்டிய பயணிகள் சென்னை விமான நிலையத்தில் கடும் அவதிக்கு ஆளாகியதாக ஊடகச் செய்திகள் கூறின.
மேலும், டெல்லி செல்ல வேண்டிய இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் கடைசி நேரத்தில் திடீர் என்று ரத்து செய்யப்பட்டதால் நூற்றுக்கணக்கான பயணிகள் சிரமத்தில் சிக்கினர்.
புதன்கிழமை டெல்லியிலிருந்து 4.15 மணிக்கு சென்னை புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது.
அதேபோல, புதன்கிழமை இரவு 8.40 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்குப் புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீர் என இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
தொடர்புடைய செய்திகள்
விமானப் பயணம் மற்றும் சேவை ரத்து குறித்த தகவல்கள் வெளிப்படையாக இல்லை என்று பயணிகள் குற்றம்சாட்டினர்.
இதற்கிடையே, நிர்வாகக் காரணங்களால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று விமானக் கட்டணம் பயணிகளுக்குத் திருப்பி அளிக்கப்படும் என்றும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை (ஜூன் 12) அகமதாபாத் - லண்டன் இடையேயான ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அதனைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக நாடு முழுவதும் பல்வேறு ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.