தலைவர்களைச் சுமக்கும் தேர்

தலைவர்களைச் சுமக்கும் தேர்

3 mins read
427670a7-4a75-48a5-85a5-68b8d9d90259
களப் பிரசாரத்தின்போது இந்த சொகுசு வாகனங்கள் தலைவர்களின் தற்காலிக இல்லமாகவும் கட்சி அலுவலகமாகவும் அவை மாறிப்போகின்றன. - படம்: கவின்
multi-img1 of 4

தமிழ்நாட்டில் அடுத்த 20 நாள்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. கட்சித் தலைவர்களின் சூறாவளிப் பிரசாரத்தால் களத்தில் அனல் பறக்கிறது.

தலைவர்களின் பிரசாரம் எந்த அளவுக்கு முக்கியமோ, அதற்கு இணையாக அவர்கள் பயணம் மேற்கொள்ளும் பிரசார வாகனங்களும் முக்கியம்.

அவை வெறும் வாகனங்கள் மட்டுமல்ல, ஏறக்குறைய ஒருமாத காலம் மேற்கொள்ளப்படும் களப் பிரசாரத்தின்போது அந்தத் தலைவர்களின் தற்காலிக இல்லமாகவும் கட்சி அலுவலகமாகவும் இயங்கி வருகின்றன.

சொகுசு இருக்கைகள், தொலைக்காட்சிப் பெட்டி, உணவு மேசை, உடற்பயிற்சிக்கென சிறு இடம், கழிவறை, நான்கைந்து பேர் அமர்ந்து பேசக்கூடிய இடம் என சகல வசதிகளையும் கொண்ட இந்தப் பிரசார வாகனங்கள் சில கோடி ரூபாய் மதிப்பு கொண்டவை. மேலும், சிறிய சோஃபா, மைக் செட், ப்ளூடூத் இணைப்பு, சிறிய மின்தூக்கி ஆகிய வசதிகளையும் கொண்டிருக்கின்றன.

இந்தத் ‘தேர்’தான் தேர்தல் களத்தில் தலைவர்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது.

காலஞ்சென்ற முதல்வர் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள்.

தேர்தல் பிரசாரத்திற்காக ஒவ்வொரு கட்சியின் தலைவர்களும் தங்களுக்கென ஒரு சொகுசு வாகனத்தைப் பயன்படுத்துவது அனைவரும் அறிந்ததுதான்.

அந்தக் காலத்தில், மேலே ‘கவர்’ இல்லாத சாதாரண ஜீப்பில் தலைவர்கள் பிரசாரத்தை முன்னெடுத்தனர். ஆனால் இன்றோ அப்படியல்ல. விதவிதமான, புதுமையான வேன்கள் வந்துவிட்டதால் சற்று வசதியுடன் தங்கள் பிரசாரத்தை மேற்கொள்கின்றனர்.

ஆனால், இந்த வாகனங்கள் பிரசாரத்திற்காக மட்டுமே தயாரிக்கப்படுபவை அல்ல. பயணத்திற்கான வண்டியாகவே உருவாக்கப்படுகிறது. பிறகெப்படி பிரசார வாகனமாக மாறுகிறது?

ஒன்றுமில்லை, வண்டிகளின் வடிவமைப்பை மாற்றியமைக்கும் நிறுவனங்களின் கைவண்ணமே இதற்குக் காரணம். இந்நிறுவனங்கள் தலைவர்களின் பிரசாரத்திற்கென தனித்துவமாக வேன்களை வடிவமைத்து தருகின்றன.

கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் எனப் பலரும் இப்படி மாற்றப்பட்ட வாகனங்களிலேயே பிரசாரத்தை மேற்கொண்டனர்.

இப்போது முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக தலைவர் பிரேமலதா, தவெக தலைவர் விஜய், நாதக தலைவர் சீமான் எனப் பலரும் பிரசாரத்திற்கென வடிவமைக்கப்பட்ட வாகனங்களிலேயே பயணம் செய்கின்றனர்.

பிரசார வாகனங்களுக்கும் தலைவர்களுக்கும் இடையே பிரித்துப் பார்க்க முடியாத ‘சென்டிமென்ட்’ உள்ளது.

தான் எதிர்கொண்ட முதல் தேர்தல் பிரசாரத்துக்கு மறைந்த எம்ஜிஆரின் பிரசார வாகனத்தை வாங்கிப் பயன்படுத்தினார் விஜயகாந்த். முதன்முதலாக அந்த வாகனத்தில் ஏறி அமரும் முன்பு அதைத் தொட்டு வணங்கினார்.

கோவையில் உள்ள கோயாஸ் நிறுவனம் கடந்த 60 ஆண்டுகளாக இத்தகைய சொகுசு பிரசார வாகனங்களைத் தயார்செய்து வருகிறது.

அதன் நிர்வாகப் பங்காளிகளில் ஒருவரான திரு முகம்மது ரியாஸ், கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா எனப் பல தலைவர்களுக்கு தங்கள் நிறுவனம் சிறந்த சேவைகளை அளித்திருப்பதாகச் சொல்கிறார்.

“தலைவர்கள் உட்கார சுழலும் இருக்கையும், ஹைட்ராலிக் மேடையும் முக்கியமானது. சிலர் மேடையில் ஏற படிக்கட்டுகள் போதுமெனச் சொல்வார்கள். சிலர் நின்றபடி மேலே போகும் ‘ஹைட்ராலிக்’ மேடையை எதிர்பார்ப்பார்கள். இதுதவிர விளக்கு, ஒலிபெருக்கி, மைக், பாதுகாவலர்கள் நிற்பதற்கான பகுதி ஆகியவற்றை அமைப்போம். அடுத்து சுற்றிலும் கேமராக்கள் பொருத்தப்படும்.

“ஓய்வெடுக்க உடம்புபிடி இருக்கை (மசாஜ் சேர்) ஒன்றும், நான்கைந்து பேர் உட்கார்ந்து பேசுவததற்கான இருக்கைகளும் இருக்கும்.

“தமிழகத்தில் தற்போது கோடைக்காலத்தில் தேர்தல் பிரசாரம் நடப்பதால், தலைவர்கள் குளிரூட்டி (ஏசி) இருப்பதை மிகவும் விரும்புவார்கள்.

“இந்தத் தேர்தல் பிரச்சார வாகனத்தை தமிழ்நாடு மட்டுமில்லாமல் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கும் தயார்செய்து கொடுக்கிறோம்,’’ என்கிறார் திரு ரியாஸ்.

திமுக, அதிமுக, தவெக, நாதக எனப் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் தங்களுக்கான பிரசார வாகனங்களில் மைக்கைப் பிடித்தபடி, ‘பெரியோர்களே, தாய்மார்களே, வாக்காளப் பெருமக்களே நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம்...’ எனத் தெம்பாக வலம்வரப் பக்கபலமாக இருப்பது இந்தப் பிரசாரத் தேர்கள்தான்.

குறிப்புச் சொற்கள்