குப்பை தேங்காமல் தேரோட்டம்; மதுரை மாநகராட்சிக்குப் பாராட்டு

குப்பை தேங்காமல் தேரோட்டம்; மதுரை மாநகராட்சிக்குப் பாராட்டு

2 mins read
85145b77-29cc-4732-bb6d-83ef26fe0fa4
மாசி வீதிகளில் தேர்கள் சென்ற பின்னர் குப்பைகளை அகற்றிய தூய்மைப் பணியாளர்கள். - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

மதுரை: கடந்த ஆண்டைப் போன்றே இம்முறையும் மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் குப்பை தேங்காமல் சுகாதாரமாக நடந்தேறியது.

மதுரை மாநகராட்சியின் 350 தூய்மைப் பணியாளர்கள் அடங்கிய குழுக்கள் தேரோட்ட நிகழ்வின்போது தேருக்கு முன்னும் பின்னும் சென்று குப்பையை உடனுக்குடன் அகற்றி அப்புறப்படுத்தினர். இதையடுத்து பல்வேறு தரப்பினரும் மாநகராட்சி நிர்வாகத்துக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா, கடந்த 10 நாள்களாக நடந்து வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. அப்போது கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் இருந்து காலை 6.30 மணிக்குத் தேர் புறப்பட்டது. பக்தர்கள், பூக்கள், மாலைகளைத் தூக்கி வீசி ஆர்ப்பரித்தனர்.

தேருக்குப் பின்னால் ஊர்வலமாக வந்த பக்தர்களுக்கு, பல்வேறு தன்னார்வ அமைப்புகள், இந்து அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் என வழிநெடுக பலர் தண்ணீர்ப் புட்டிகள், குளிர்பானங்கள், மோர் போன்றவற்றை வழங்கினர். சிலர் நெகிழி விசிறிகளையும் தொப்பிகளையும் வழங்கினர்.

பழங்கள், புளியோதரை, எலுமிச்சை, தயிர்ச்சோறு, சைவ பிரியாணி ஆகியவை அன்னதானமாக வழங்கப்பட்டன.

எனவே, தேரோட்டம் முடிந்த பிறகு மாசி வீதிகளில் பூக்கள், உணவுக்கழிவு, தட்டுகள், தண்ணீர்ப் புட்டிகள், பக்தர்கள் அணிந்திருந்த காலணிகள் எனப் பல்வேறு பொருள்கள் சிதறிக்கிடந்தன. அவற்றை 200 மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்கள், 150 தற்காலிகப் பணியாளர்கள் ஆகியோர் சேகரித்து அகற்றினர்.

தேர் செல்வதற்குமுன் குப்பையில்லாமல் பார்த்துக்கொள்வதும் தேர் சென்ற பின்னர் குவிந்த குப்பையை உடனுக்குடன் அகற்றுவதுமாக தேர்த்திருவிழாவை சுகாதாரமான விழாவாக மாநகராட்சி நிர்வாகம் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.

மாநகராட்சியின் இந்தத் தூய்மைப் பணிக்கு கடந்த ஆண்டே மக்களிடம் பாராட்டுகள் கிடைத்தன.

குறிப்புச் சொற்கள்