சென்னை விமான சாகச நிகழ்ச்சி: கடும் வெப்பத்தால் ஐவர் மரணம்

சென்னை விமான சாகச நிகழ்ச்சி: கடும் வெப்பத்தால் ஐவர் மரணம்

2 mins read
6c40c76c-c4b2-490f-978e-5945c3123217
நிகழ்ச்சியை நேரில் கண்டுகளிக்க ஏறத்தாழ 1.5 மில்லியன் பேர் உலகிலேயே மிக நீண்ட கடற்கரைகளில் ஒன்றான சென்னை மெரினா கடற்கரையில் திரண்டதாக தமிழகக் காவல்துறை கூறியது. விமான சாகச நிகழ்ச்சியைக் காண வந்திருந்தோரில் பலர் வெயில் தாங்காமல் குடை பிடித்து நின்றுகொண்டிருந்தனர். - படம்: இபிஏ
multi-img1 of 4

சென்னை: சென்னையின் மெரினா கடற்கரையில் அக்டோபர் 6ஆம் தேதியன்று விமான சாகச நிகழ்ச்சியைக் காணச் சென்றவர்களில் ஐவர் மாண்டுவிட்டதாக தமிழக சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதிப்படுத்தியுள்ளார்.

“சுட்டெரிக்கும் வெயில் காரணமாக ஐந்து பேர் மாண்டுவிட்டனர். மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுவதற்கு முன்பே அவர்களது உயிர் பிரிந்துவிட்டது. கடும் வெப்பத்தால் மொத்தம் 102 பேர் பாதிக்கப்பட்டனர். முதலில் 93 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

“நிலைமை மேம்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டோரில் ஏழு பேர் மட்டுமே தற்போது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்,” என்றார் அமைச்சர் சுப்பிரமணியன்.

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டுவிழாவை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியை நேரில் கண்டு களிக்க ஏறத்தாழ 1.5 மில்லியன் பேர் உலகிலேயே மிக நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினா கடற்கரையில் திரண்டதாக தமிழகக் காவல்துறை கூறியது.

நிகழ்ச்சிக்கு வருபவர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதை அமைச்சர் சுப்பிரமணியன் சுட்டினார்.

“விமான சாகச நிகழ்ச்சியைக் காண நேரில் வருபவர்கள் குடை, குடிநீர் போத்தல்கள் ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும் என்று இந்திய விமானப் படை நிகழ்ச்சிக்கு முன்பு வலியுறுத்தியிருந்தது,” என்று அவர் தெரிவித்தார்.

விமான சாகச நிகழ்ச்சியைக் காண வந்திருந்தோரில் பலர் வெயில் தாங்காமல் குடை பிடித்து நின்றுகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சி நடைபெற்ற இடம் மிகவும் சூடாக இருந்தபோதும் அங்கு கூடியிருந்த மக்களுக்குக் குடிநீர் வழங்கப்படவில்லை என்று நிகழ்ச்சியைக் காண சென்றிருந்த மென்பொருள் பொறியாளர் திரு சந்திரமோகன் அதிருப்தி தெரிவித்தார்.

பலர் மயங்கி விழுந்ததைத் தாம் கண்டதாக அவர் கூறினார்.

“நிகழ்ச்சி நிறைவுற்றதும் நிலைமை மோசமடைந்தது. சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மிகக் கடுமையாக இருந்தது,” என்றார் அவர்.

திமுக அரசாங்கம் மக்களின் நலனைக் கருதவில்லை என்றும் தேவையான ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் கண்டனக் குரல் எழுப்பியுள்ளன.

“தரமற்ற திட்டமிடல் காரணமாக இந்தச் சோக நிகழ்வு ஏற்பட்டுள்ளது. இதற்குத் தமிழ்நாடு அரசு பொறுப்பேற்க வேண்டும்,” என்று தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்தார்.

இந்திய விமானப் படை கேட்டுக்கொண்டபடி அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாட்டு அரசு செய்துகொடுத்ததாக அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “சாகச நிகழ்ச்சி இந்திய விமானப்படை ஏற்பாடு செய்யப்பட்டதாகும். நிகழ்ச்சி நேரத்தை தேர்வு செய்தது விமானப்படைதான். தட்பவெப்பநிலை, விமானம் பறக்கும் சூழல் ஆகியவற்றைக் கொண்டு நிகழ்ச்சியின் நேரத்தை அவர்கள் திட்டமிட்டனர்.

ஐந்து பேர் உயிரிழந்ததற்குக் காரணம் வெயிலின் தாக்கம் மற்றும் நீர்சத்துக் குறைபாடேயாகும். இதை யாரும் அரசியலாக்க வேண்டாம்,” என்றார்.

ரூ. 5 லட்சம் இழப்பீடு

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

குறிப்புச் சொற்கள்