சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (மே 26) அதிகாலை 2.30 மணியளவிலும் பின்னர் காலை 8.30 மணியளவிலும் சென்னை விமான நிலைய இயக்குநருக்கு இரண்டு மின்னஞ்சல்கள் வந்ததாக ‘தி இந்து’ செய்தி தெரிவித்தது.
அவற்றில், விமான நிலையத்திற்கு அருகே வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்றும் விமானத்திலிருந்து பயணிகள் இறக்கிவிடப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாக விமான நிலைய வட்டாரங்கள் கூறின.
அதனைத் தொடர்ந்து, அந்த மின்னஞ்சல்கள் காவல்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பின்னர், அம்மிரட்டல்கள் வெறும் புரளிதான் எனக் கண்டறியப்பட்டது.
இருப்பினும், இந்திய விமான நிலையங்கள் ஆணையம், விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு ஆணையம், காவல்துறை, மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை ஆகியவை உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டன.
அதனைத் தொடர்ந்து, “விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமானங்களில் பயணிகள் ஏறுவதற்குமுன் கூடுதல் சோதனைகள் நடத்தப்படும்,” என்று தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, சென்னை விமான நிலையத்தில் ஐந்து இடங்களில் வெடிகுண்டுகள் வைகக்ப்பட்டுள்ளன என்றும் அவை இன்னும் ஐந்து நாள்களில் வெடிக்கும் என்றும் மிரட்டல் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்ததாக வேறு சில ஊடகச் செய்திகள் தெரிவித்தன.