சென்னை: ‘அம்மா’ உணவகங்களின் தரத்தை மேம்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கடந்த 2013ஆம் ஆண்டு தமிழகத்தில் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன. அதிமுக ஆட்சியிலும், கொரோனா, புயல், வெள்ளம் காலகட்டத்திலும் அம்மா உணவகங்கள் பொதுமக்களுக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்தன.
பத்தாண்டுகால அதிமுக ஆட்சிக்குப் பின் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதனால், அம்மா உணவகம் வழக்கம் போல இயங்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆயினும், அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில், சென்னையில் செயல்படும் அம்மா உணவகங்களின் தரத்தை மேம்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது 391 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு குறைந்த விலை உணவு கிடைப்பதால், கூலித் தொழிலாளர்களும் ஏழை மக்களும் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.
உணவுவகைகளின் சுவை ஒரே விதமாக இருப்பதால் தற்போது அங்கு உண்ணும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனையடுத்து, உணவுவகைகளை மாற்றி, சுவையாக வழங்கினால், விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகப் பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில், கிட்டத்தட்ட ரூ.5 கோடி செலவில் ‘அம்மா’ உணவகங்களின் கட்டமைப்பை மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உணவகங்களின் சமையலறையில் உள்ள பழுதடைந்த இயந்திரங்கள், சமையலறைப் பொருள்களை மாற்ற மண்டல அதிகாரிகளுக்கு மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
மேலும், வரும் காலங்களில் ‘அம்மா’ உணவகம் தொடர்பாக புகார் வந்து, மாநகராட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.