சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, வடசென்னை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கபிலனைக் காவல்துறை கைதுசெய்தது.
இம்மாதம் 1ஆம் தேதி கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெரவள்ளூரில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட கபிலன், முதல்வர் ஸ்டாலின் பற்றியும் அவருடைய குடும்பத்தினர் பற்றியும் அவதூறாகப் பேசியதாகச் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து, திமுக தரப்பில் கபிலன்மீது காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது. அதன் தொடர்பில், ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) வியாசர்பாடியில் உள்ள கபிலனின் வீட்டில் வைத்து, காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.
கபிலன் கைது செய்யப்பட்டதை அறிந்த பாஜகவினர் அப்பகுதியில் திரண்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே, கபிலன் கைதுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.