தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னை: இன்ஃபோசிஸ், டிசிஎஸ் நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

2 mins read
475fb8b4-7895-46ca-bb68-42cd9c50f021
சென்னை சோழிங்கநல்லூரில் இயங்கிவரும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். - படம்: ஊடகம்

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் அண்மைக்காலமாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவது அதிகரித்துள்ளது.

அவ்வகையில், இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்விசஸ் (டிசிஎஸ்), சென்னை ஒன் ஆகிய மூன்று தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் பிடிஐ, புதிய தலைமுறை செய்தி நிறுவனங்களுக்கும் மிரட்டல்கள் வந்துள்ளன.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை, சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) காலை மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதனைத் தொடர்ந்து, தாம்பரத்தில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் அந்நிறுவனத்திற்கு விரைந்து வெடிகுண்டுச் சோதனையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்குமேல் தேடியும் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளிதான் எனத் தெரியவந்தது.

அதுபோல, மேட்டுக்குப்பத்தில் உள்ள டிசிஎஸ், துரைப்பாக்கத்தில் உள்ள சென்னை ஒன் நிறுவனங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

இதனிடையே, கிண்டி அருகே உள்ள புதிய தலைமுறை செய்தி நிறுவனத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) அலுவலகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த காவல்துறை, அங்கிருந்த பணியாளர்கள் அனைவரையும் வெளியேற்றினர். பின்னர் மோப்ப நாய் துணையுடன் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் சோதனை நடத்தியும் எதுவும் சிக்கவில்லை.

அதுபோல, கோடம்பாக்கத்திலுள்ள பிடிஐ செய்தி நிறுவனத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், சோதனைக்குப் பிறகு அதுவும் புரளி எனத் தெரியவந்தது.

போலி மின்னஞ்சல் முகவரிகளிலிருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அவற்றை அனுப்பியவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மின்னஞ்சல்வழி 20-30 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதாகக் காவல்துறை உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர் விஜய், எஸ்.வி. சேகர், நடிகைகள் நயன்தாரா, திரிஷா ஆகியோரின் வீடுகள், பாஜக மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயம், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்