இந்தியாவின் முதல் அமைதியான ரயில் நிலையமாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் மாறியுள்ளது.
நிலையத்தில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் செய்யப்பட்டு வந்தன. அதற்கு பதிலாக, இப்போது ரயில்கள் புறப்படும், நிலையத்தை வந்தடையும் நேரம், ரயில் எண், நடைமேடை போன்ற அனைத்து விவரங்களும் மின்னிலக்கத் திரைகளில் ஒளிபரப்பப்படுகிறது.அதோடு பயணிகளின் வசதிக்காக தகவல் மையங்களில் ஊழியர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் சென்ட்ரல் ரயில் நிலையம் அதிக சத்தம், கூச்சல் இல்லாத நிலையமாக மாறியுள்ளது.
விமான நிலையங்கள் போலவே, நிமிடத்துக்கு நிமிடம் ரயில்கள் குறித்த விவரங்கள் மின்னிலக்கத் திரையில் ஒளிபரப்பாகும். அதைப் பார்த்து பயணிகள் விவரங்களை தெரிந்து கொண்டு பயணம் செய்தனர். பயணிகளின் வசதிக்காக சென்ட்ரல் ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதிகளில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடுகளை காட்டும் பெரிய மின்னிலக்கத் திரைகள் வைக்கப்பட்டுள்ளன.
150 ஆண்டுகள் பழமையான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு ரயில்கள் இயங்குகின்றன. தினமும் 200 ரயில்களை சென்ட்ரல் ரயில் நிலையம் கையாளுகிறது. நாள்தோறும் கிட்டத்தட்ட 500,000 பேர் நிலையத்திற்கு வருகையளிக்கின்றனர்.


