சென்னையைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப (ஐடி) நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு தீபாவளிப் பரிசாக நவீன கார்களையும் மோட்டார் சைக்கிள்களையும் வாரி வழங்கி இருக்கிறது.
‘டீம் டீடெய்லிங் சொல்யூஷன்ஸ்’ (Team Detailing Solutions ) எனப்படும் அந்நிறுவனம், தனது ஊழியர்களின் உற்பத்தித்திறனை ஊக்குவிக்கும் விதமாக 28 கார்களை அவர்களுக்கு சனிக்கிழமை (அக்டோபர் 12) வழங்கியது.
மேலும் சில ஊழியர்களுக்கு 29 மோட்டார் சைக்கிள்களையும் ஊக்குவிப்பு நடவடிக்கையாக அது வழங்கி உள்ளது.
அது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீதர் கண்ணன், ஊழியர்களின் கடின உழைப்பை அங்கீகரித்து அவர்களைப் பாராட்ட வேண்டியது அவசியம் என்றார்.
மேலும் அவர், “எங்களிடம் பணியாற்றும் ஊழியர்களின் சாதனைகளை அங்கீகரிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
“ஊழியர்களின் செயல்திறன், எத்தனை ஆண்டுகளாக வேலை செய்கிறார்கள் என்பதன் அடிப்படையில் அளவீடு செய்து பரிசுகளை வழங்கி உள்ளோம். கார் யாருக்கு, மோட்டார் சைக்கிள் யாருக்கு என்பதும் அந்த அளவீட்டின் அடிப்படையில்தான் கணக்கிடுகிறோம்.
“மாருதி சுஸுகி, ஹூண்டாய், மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற கார்கள் ஊக்குவிப்புப் பரிசாக வழங்கப்பட்டு உள்ளன. அவற்றுக்குப் பதிலாக, வேறு நிறுவனத்தின் கார் அல்லது இன்னும் மேம்பட்ட ‘மாடல்’ காரை விரும்பும் ஊழியர்கள் அதற்கான விலையின் கூடுதல் தொகையை மட்டும் செலுத்தினால் போதும்.
“ஏற்கெனவே 2022ஆம் ஆண்டு இரண்டு மூத்த ஊழியர்களுக்கு கார்களைப் பரிசாக வழங்கினோம்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
திருமணத்திற்கு நிதியுதவி
வாகனங்களைப் பரிசாக வழங்குவதோடு, ஊழியர்களின் திருமணத்திற்கு இந்த நிறுவனம் நிதி உதவியையும் செய்து வருகிறது.
ஒவ்வோர் ஊழியரின் திருமணத்திற்கும் இதுவரை வழங்கப்பட்டு வந்த 50,000 ரூபாயை 1 லட்சம் ரூபாயாக இந்த ஆண்டு அது உயர்த்தி உள்ளது.
நிறுவனத்துக்காகப் பாடுபட வேண்டும் என்ற நேர்மறை எண்ணத்தையும் நிறுவனம் மீதான விசுவாசத்தையும் இதுபோன்ற ஊக்குவிப்பு செயல்கள் அதிகரிக்கும் என்று ‘டீம் டீடெய்லிங் சொல்யூஷன்ஸ்’ நிறுவனம் நம்புகிறது.
2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பல்வேறு கட்டமைப்பு உலோக வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுச் சேவைகளை வழங்கி வருவதாக அதன் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

