உதவிநாடி வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர்

1 mins read
07029a51-2f35-476b-8e05-73877475eb38
காவலர் மட்டுமல்லாமல் சிறுவன் ஒருவனும் 13 வயதுச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

சென்னை: பெண்களுக்குப் பாதுகாப்பு தரக்கூடிய காவல்நிலையக் கூடத்திலேயே 13 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிறுமி காவலரிடம் உதவி கேட்டபோது, பட்டினப்பாக்கம் காவல்நிலையக் கூடத்தில் வைத்து 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்தச் சிறுமி தமது நண்பரைச் சந்திக்க சென்னை பட்டினப்பாக்கம் சென்றபோது அங்கு பிரச்சினை ஏற்பட்டதால் அங்கிருந்த போக்குவரத்து காவலரிடம் உதவி கேட்டுள்ளார்.

அவருக்குப் பாதுகாப்பு அளித்து உதவ வேண்டிய, மயிலாப்பூர் போக்குவரத்துக் காவலர் ராமன், சிறுமியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லாமல் அருகிலிருந்த காவல்நிலையக் கூடத்தில் (பூத்) அடைத்து வைத்து அந்தச் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.

பின்னர், சிறுமியை வீட்டில் இறக்கிவிட வாகனத்தில் அழைத்துச் சென்றபோதும் அவர் பாலியல் தொல்லை கொடுத்தார்.

அது தொடர்பாக சிறுமி அளித்த புகாரின்பேரில் காவலர் ராமன் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் விசாரணையில், 16 வயதுச் சிறுவனும் அந்தச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது.

அதையடுத்து அந்தச் சிறுவனையும் அவனுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது தாயாரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்