சென்னை: தமிழகத் தலைநகர் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கேட்பாரற்ற நிலையில் நீண்டகாலமாக ஏராளமான வாகனங்கள் கிடக்கின்றன.
சாலைகள், முக்கியத் தெருக்களில் யாரும் உரிமை கோராமல் கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.
இதனால், அப்பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறும் சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
அவ்வாகனங்கள் மழையிலும் வெயிலிலும் சேதமடைந்து, ஒன்றுக்கும் பயன்படாத வகையில் வீணாகி, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது.
இதனையடுத்து, சாலையோரங்களில் துருப்பிடித்து வீணாகக் கிடக்கும் அவ்வாகனங்களை அகற்றி, ஏலம் விடுவதற்கு சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
கேட்பாரற்றுக் கிடக்கும் இந்த வாகனங்களில் ஏதேனும் குற்றச்செயல்களுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க காவல்துறையின் அனுமதி கேட்டு இருப்பதாக மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
மேலும், “அந்த வாகனங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் அகற்றப்படும். ஒவ்வொரு வாகனத்தையும் அகற்ற ஒப்பந்ததாரருக்கு பணம் செலுத்தப்படும். அகற்றப்படும் வாகனங்கள் ஏலம் விடுவதற்கான கொள்கை வகுக்கப்படுகிறது,” என்றும் அவர் சொன்னார்.
கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து 1,310 வாகனங்கள் அகற்றுவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 327 வாகனங்கள் மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளன.