மக்கள் குறை தீர்க்க ‘ஏஐ’ உதவியை நாடும் சென்னை மாநகராட்சி

மக்கள் குறை தீர்க்க ‘ஏஐ’ உதவியை நாடும் சென்னை மாநகராட்சி

2 mins read
c61355d3-bd72-4c8f-a6d8-452ba1a1dba8
சென்னை மாநகராட்சி வளாகம். - படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

சென்னை: பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதில் செயற்கை நுண்ணறிவும் இனி முக்கியப் பங்காற்றும் எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதற்காக ரூ.349 கோடி செலவில் ‘ஏஐ’ தொழில்நுட்பத்துடன் கூடிய ‘சிட்டிசன் 360’ என்ற இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்களின் அனைத்துப் புகார்களையும் குறைகளையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்க முடியும் என்றும் உடனுக்குடன் அவற்றுக்குத் தீர்வுகாண இயலும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் ஏற்கெனவே ஒருங்கிணைந்த கட்டளை, கட்டுப்பாட்டு மையம் இயங்கி வருகிறது. அதனை மேம்படுத்தும் வகையில், இந்த நவீன திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

சென்னை மாநகராட்சியில் வரி செலுத்துவது, சாலைப் பள்ளங்கள் குறித்த புகார் அளிப்பது போன்ற சேவை சார்ந்த பணிகளைக் கவனிக்க தனித்தனிப் பிரிவுகள் உள்ளன. இதனால், பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கும் அவர்கள் முன்வைக்கும் பிரச்சினைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வுகாண முடியவில்லை.

இந்நிலையில், இனி அந்தச் சிக்கல் இல்லை என்றும் அனைத்துப் புகார்களும் கோரிக்கைகளும் ஒரே மென்பொருள் தளத்திற்குக் கொண்டுவரப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் மக்களின் குறைகளை மிகவும் விரிவாகவும் விரைவாகவும் ஆய்வு செய்து தீர்வுகாண முடியும் எனக் குறிப்பிட்ட தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், இப்புதிய தளத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றும் என்றும் கூறினர்.

இந்த நடவடிக்கையானது மாநகராட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் என்றும் அதனால் மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இத்திட்டம் இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்பட உள்ளது. செயற்கை நுண்ணறிவு, ‘சாட்பாட்’ போன்ற உரையாடல் அமைப்புகளை உருவாக்கி, அவற்றை ‘வாட்ஸ்அப்’, இணையத்தளங்கள், மின்னஞ்சல் ஆகியவற்றுடன் இணைப்பது முதற்கட்டமாகும். இதன்மூலம் மக்கள் அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பெற்று அடுத்தகட்டத்துக்கு நகர இயலும்.

இரண்டாம் கட்டமாக, இந்தப் புதிய தளத்தின் செயல்பாடுகள் தொடர்பான அம்சங்களும் பராமரிப்புப் பணிகளும் கவனிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்