சென்னை: செம்பரம்பாக்கத்தில் உள்ள ஓர் உணவகத்தில், வெள்ளிக்கிழமை இரவு மூன்று பேர் சாப்பிட்டனர். அவர்கள் சாப்பிட்ட பின், உணவுக்குப் பணம் கொடுக்காமல் சென்றனர். அங்கிருந்த ஊழியர்கள் அவர்களிடம் பணம் கட்டுமாறு கூறியிருக்கின்றனர். அவர்களோ பணம் கொடுக்க மறுத்து சத்தம் போட்டுள்ளனர்.
இதனையடுத்து உணவக உரிமையாளர் அவர்களிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு இடத்தைக் காலி செய்யும்படி கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மூன்று பேரும் உணவக உரிமையாளரை அரிவாளால் கொடூரமாகத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் அந்த மூன்று பேரையும் கண்டுபிடித்து கைது செய்தனர்.
காவல்துறை அதிகாரிகள் அந்த மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில், அந்த மூவரும் ஒரே இரவில் வெவ்வேறு இடங்களில் மூன்று பேரை வெட்டி பணத்தைப் பறித்துக்கொண்டு தலைமறைவானது தெரியவந்துள்ளது. அம்பத்தூர், கொரட்டூர் ஆகிய இடங்களிலும் அரிவாளால் வெட்டிப் பணம் பறித்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
சென்னையில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

