சென்னை: சென்னை மாநகர மக்களின் முதன்மைக் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் ஆறு முக்கியமான ஏரிகளின் நீர் இருப்பு கவலை அளிக்கும் வகையில் மிகக் கடுமையாகச் சரிந்துள்ளதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
தமிழகத் தலைநகரின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை, வீராணம் ஆகிய ஆறு ஏரிகளின் மொத்த நீர் இருப்பு 5.1 டிஎம்சி என்ற அளவுக்குக் குறைந்துள்ளது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதாக அந்த ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீண்ட நாள்களாக நிலவிவரும் வறண்ட வானிலை, போதிய மழைப்பொழிவு இல்லாமை, எல் நினோ தாக்கத்தால் ஏரிகளில் உள்ள நீர் வேகமாக ஆவியாகி வருவதுமே இந்நிலைக்குக் காரணம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 13.21 டிஎம்சி ஆகும். கடந்த ஆண்டு இதே நாளில் 9.10 டிஎம்சி தண்ணீர் இருந்த நிலையில், தற்போது நீர் இருப்பு பாதியாகச் சரிந்துள்ளது.
கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் ஏரிகளில் தண்ணீர் இருப்பு பாதியாகக் குறைந்துள்ளதால், வரும் நாள்களில் சென்னை நகரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் சென்னைவாசிகளிடையே எழுந்துள்ளதாக தினகரன் ஊடகம் தெரிவித்துள்ளது.
‘சிவப்பு’ மண்டலத்தில் திண்டுக்கல்
இதனிடையே, திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக கிராமப்புறங்கள் முதல் நகர்ப்புறங்கள் வரை குடிநீர்த் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது.
நிலைமை மோசமடைந்துள்ளதால், திண்டுக்கல் மாவட்டம் அதி தீவிரத் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் ‘சிவப்பு’ மண்டலமாக வகைபடுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சியின் முக்கியமான நீர் ஆதாரமான ஆத்தூர் நீர்த்தேக்கம் முற்றிலும் வறண்டுவிட்டது. இதனால் காவிரி கூட்டுக்குடிநீர்த் திட்டத்தைச் சார்ந்து மூன்று முதல் நான்கு நாள்களுக்கு ஒருமுறையே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக இந்து தமிழ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
