சென்னை: சென்னையில் ‘எல்’ வடிவ மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 15) திறந்து வைத்தார். பின்னர், மேம்பாலத்தில் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த இருதட ஒரு வழிச்சாலை மேம்பாலம் ரூ.60.68 செலவில் கட்டப்பட்டுள்ளது. இருவழித்தடம் அகலம் கொண்டதாகவும் ஒருவழி வாகன போக்குவரத்து கொண்டதாகவும், வடிவமைக்கப்பட்டுள்ள இப்பாலம் கிட்டத்தட்ட 652 மீட்டர் நீளமானது.
இந்த மேம்பாலம் ராஜீவ் காந்தி சாலை, கிண்டி, அடையாறு, மத்திய கைலாஷ் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறைக்கும்.
சென்னை அடையாறு, கிண்டியை இணைக்கும் பிரதான சாலையாக 3.2 கிலோ மீட்டர் சர்தார் படேல் சாலை உள்ளது.
அந்தச் சாலையில் கவர்னர் மாளிகை, சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம், அண்ணா பல்கலைக்கழகம், அடையாறு புற்றுநோய் நிறுவனம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், காந்தி மண்டபம், காமராஜர் நினைவிடம், கிண்டி சிறுவர் பூங்கா போன்ற பல முக்கிய இடங்கள் அமைந்துள்ளன.
சர்தார் படேல் சாலையின் மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து ராஜீவ்காந்தி சாலை (ஓ.எம்.ஆர். சாலை) தொடங்குகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியான இங்கு வாகனங்கள் எளிதாகச் செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

