சென்னை: தமிழகத்தின் இதயத்துடிப்பு சென்னை மாநகரம்தான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
386வது ‘சென்னை தின’த்தையொட்டி அவர் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘சென்னை வெறும் ஊரல்ல’ என்றும் ‘வாழவைக்கும் சென்னை’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து, பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து, எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து, சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து, மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386.
“சென்னை தமிழகத்தின் இதயத்துடிப்பு,” என முதல்வர் ஸ்டாலின் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சென்னை தினத்தை முன்னிட்டு, மாநகரில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சில இடங்களில் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சென்னைவாசிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். பள்ளிகளில் சிறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, மாணவர்களுக்கு சென்னை மாநகரம் உருவாகி, வளர்ச்சி அடைந்த விதம் குறித்து, சுவாரசியமான தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

