தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி; பத்துப் பேர் கைது

1 mins read
00834f68-2a96-405c-bd3c-9d3caa64941f
படம்: - தமிழ் முரசு

விருதுநகர்: சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்குவதாகக் கூறி, கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததன் தொடர்பில் தமிழகக் காவல்துறை பத்துப் பேரைக் கைதுசெய்து விசாரித்து வருகிறது.

இம்மோசடி தொடர்பில், விருதுநகர் மாவட்டம், பாலவநத்தத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ண்சாமி - சசி இணையரைக் கைதுசெய்து விசாரித்ததில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் திருப்பூரைச் சேர்ந்த நாகேந்திர குமார் என்பவரின் துணையோடு ஏறக்குறைய 400க்கும் மேற்பட்டோரை மோசடி செய்து, அவர்களிடம் கோடிக்கணக்கான ரூபாயைச் சுருட்டியது வெளிச்சத்துக்கு வந்தது.

அத்துடன், அரசு முத்திரையுடன் கூடிய பணி நியமன ஆணை வழங்கப்பட்டும் உயர் நீதிமன்றம் பெயரில் தனி இணையத்தளம் தொடங்கப்பட்டும் பெரிய அளவில் மோசடி அரங்கேறி இருப்பது அம்பலமாகியுள்ளது.

இதனையடுத்து, இவ்வழக்கு சிபிசிஐடி காவல் பிரிவிற்கு மாற்றப்பட்டது. மேலும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தியின் கவனத்திற்கும் கொண்டுசெல்லப்பட்டது.

நீதிமன்றத்தை ஏமாற்றும் அளவிற்கு நீதிமன்றத்தின் பெயரை பயன்படுத்திய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் நேரடி நியமன காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்பில், அருப்புக்கோட்டை காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் காயத்ரி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அதனடிப்படையில் 18 பேர்மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை, அவர்களில் பத்துப் பேரைக் கைதுசெய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்