சென்னை: சென்னை மெட்ரோ ரயிலின் ‘சுற்றுலா அட்டை’ சேவை பிப்ரவரி மாதம் முதல் நிறுத்தப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கும் பணிசார்ந்து பல்வேறு இடங்களுக்கும் பயணம் செய்வோருக்கு இவ்வகைப் பயண அட்டைகள் மிகவும் வசதியாக இருந்தன.
ஒருநாள் சுற்றுலா அட்டை 100 ரூபாய்க்கும் 30 நாள் அட்டை 2,500 ரூபாய்க்கும் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், பிப்ரவரி 1ஆம் தேதியிலிருந்து ஒருநாள், 30 நாள் சுற்றுலா அட்டைகள் வழங்கப்படாது என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சுற்றுப்பயணிகள் இவ்வகைப் பயண அட்டைகளைப் பரவலாகப் பயன்படுத்திவந்த நிலையில், மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் இந்தத் திடீர் அறிவிப்பால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆயினும், பயணிகள் தங்கள் பயணத் தேவைகளுக்கு மின்னிலக்கப் பயணச்சீட்டு முறைகள், கியூஆர் குறியீடு அடிப்படையிலான பயணச்சீட்டுகள், ஒற்றைப் பயணச்சீட்டுகள், தேசிய பொதுப் போக்குவரத்து அட்டை உள்ளிட்ட மாற்று பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோவில் தொடர்ந்து பயணம் செய்யலாம் என்றும் அது தெரிவித்துள்ளது.
தேசிய பொதுப் போக்குவரத்து அட்டை தற்போது சென்னைப் பெருநகரக் கழக (MTC) பேருந்துகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, தடையற்ற பயண அனுபவத்தை வழங்கிவருவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.