சென்னை: அண்மைய சில மாதங்களாக சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகரில் 138 ஓட்டுநர்கள் இல்லாத தானியங்கி ரயில்களை இயக்கும் வகையில் இரண்டாம் கட்ட திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மொத்தம் 118 கிலோமீட்டர் தொலைவுக்கு ரயில் பாதைகள் அமைக்கப்படும் என்றும் 128 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன என்றும் மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்காக ரூ.61,843 கோடி செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்குள் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பின்னர் ரயில் சேவை அதிகரிக்கும் என்றும் சென்னையில் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும் அதற்கேற்ப திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் சென்னையில் போக்குவரத்து நெரிசல் மேலும் குறையும் என கூறியுள்ளனர்.