அடுக்குமாடி வீடுகளில் ஒரு லட்சம் ஸ்மார்ட் குடிநீர் மீட்டர்களைப் பொருத்தும் சென்னை குடிநீர் வாரியம்

2 mins read
33157f48-e432-4088-a4df-4e09a2b42a9a
படங்களில் இருப்பவை போல், ஒரு லட்சம் ஸ்மார்ட் குடிநீர் மீட்டர்களைக் கொள்முதல் செய்து அடுக்குமாடி வீடுகளில் பொருத்த உள்ளது சென்னை குடிநீர் வாரியம். - படங்கள்: இந்து தமிழ் திசை

சென்னை: குடிநீர் வீணாவதைத் தடுக்கவும் பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கவும் முக்கியமான நடவடிக்கை ஒன்றை சென்னை குடிநீர் வாரியம் எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, முதல் கட்டமாக அடுக்குமாடி வீடுகளில் பொருத்துவதற்காக ஒரு லட்சம் ஸ்மார்ட் குடிநீர் மீட்டர்களைக் கொள்முதல் செய்ய முடிவெடுத்துள்ளது.

மொத்தம் எட்டு லட்சத்துக்கும் அதிகமான குடிநீர் இணைப்புகளை வழங்கியுள்ள சென்னை குடிநீர் வாரியம், சாதாரண வீடுகளுக்கு அளவற்ற குடிநீர் பயன்பாட்டுக்கான மாதக் கட்டணமாக 105 ரூபாயும் அடுக்குமாடி வீடுகளுக்கு 200 ரூபாயும் வசூலித்து வருகிறது.

ஏரி நீரைச் சுத்திகரித்து விநியோகிப்பதற்கு 1,000 லிட்டருக்கு எட்டு ரூபாயையும் கடல்நீரை குடிநீராக்க 47 ரூபாயையும் செலவிடுவதாக வாரியம் கூறியது.

அளவற்ற குடிநீர் பயன்பாட்டுக்கு குறைவான அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதால், பலர் இந்தத் தண்ணீரைக் கார் கழுவுவதற்கும் வீட்டுத் தோட்டங்களுக்குப் பாய்ச்சவும் நீச்சல் குளங்களை நிரப்புவதற்கும் என அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதனால் குடிநீர் வீணாகிறது.

இந்தச் சூழலில், ஏழை மக்களுக்கும், அதிக நீர் பயன்படுத்துபவர்களுக்கும் ஒரே கட்டணம் வசூலிக்கும் முறையை மாற்றவும் நீர் வீணாவதைத் தடுக்கவும, குடிநீர் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வாரியம் இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.

இதன்மூலம், மின்சாரக் கட்டணத்தைப் போலவே, தாங்கள் பயன்படுத்தும் தண்ணீரின் அளவுக்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படும்.

இதற்காக ஒரு லட்சம் ஸ்மார்ட் குடிநீர் மீட்டர்களைக் கொள்முதல் செய்ய உள்ளது குடிநீர் வாரியம்.

முதற்கட்டமாக அடுக்குமாடி வீடுகளுக்கும் அந்தக் கருவி பொருத்தப்படும்.

அடுத்த கட்டமாக 2,400 சதுர அடிக்கு மேல் பரப்பளவு கொண்ட குடியிருப்புகளுக்கு அது பொருத்தப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதைக் கண்காணிக்க தனி ஆலோசகரை நியமிக்கவும் குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்