தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
சக்கர நாற்காலிப் பயணிகள் எளிதாக ஏறி இறங்க வசதி

சென்னையில் தாழ்தளப் பேருந்துச் சேவை தொடக்கம்

2 mins read
06ac18cc-e682-4dc0-aca0-655869b09089
சென்னைச் சாலைகளில் இயக்கப்படவிருக்கும் புதிய தாழ்தளப் பேருந்துகள். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: உடற்குறையுள்ளோரும் எளிதாக ஏறி இறங்கிச் செல்லும் வகையில் சென்னையில் தாழ்தள மாநகரப் பேருந்துச் சேவை தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் கடந்த 2018ஆம் ஆண்டுவரை தாழ்தள சொகுசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. அப்பேருந்துகள் உடற்குறையுள்ளோர் எளிதில் ஏறும் வகையில் இருந்தன. 2018க்குப்பிறகு மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தாழ்தள சொகுசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து உடற்குறையுள்ளோர் உரிமை ஆர்வலர்கள் வழக்கு தொடுத்தனர்.

அவ்வழக்கு விசாரணையின்போது, “தாழ்தள சொகுசுப் பேருந்துகளுக்கு அதிகச் செலவு ஆகிறது. தாழ்வான படிக்கட்டுகளால் பேருந்திற்குள் மழைநீர் எளிதில் புகுந்துவிடும். அத்துடன், குறுகலான சாலைகளில் இயக்குவது சிரமம் என்பதால் அத்தகைய பேருந்துகளை வாங்கவில்லை,” என்று தமிழக அரசு வாதிட்டது.

ஆனால், அதனை ஏற்காத நீதிமன்றம், குறைந்தது 350 தாழ்தள சொகுசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) தாழ்தளப் பேருந்துகள் உட்பட 100 பேருந்துகளைக் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

சக்கர நாற்காலிப் பயணிகள் எளிதில் ஏறி இறங்கும் வகையில் தாழ்தளப் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும், மின்னிலக்கத் தகவல் பலகை, கண்காணிப்புப் படக்கருவி, தானியங்கிக் கதவுகள், உடற்குறையுள்ளோருக்கென சிறப்பு இருக்கை ஆகிய வசதிகளை அப்பேருந்துகள் கொண்டுள்ளன. நீல நிறத்திலுள்ள அப்பேருந்துகளில் கைப்பேசிகளுக்கு மின்னூட்டம் செய்யவும் முடியும்.

சென்னையைப் பொறுத்தவரை, 1,552 தாழ்தளப் பேருந்துகளை சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் பெற உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. மேலும், தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் மதுரை, கோவை மாவட்டங்களுக்கும் தலா 100 தாழ்தளப் பேருந்துகள் ஒப்பந்த முறையில் வாங்கப்படவுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்