சென்னை: பரந்தூர் விமான நிலையத்திற்கான கட்டுமானப் பணிகளை 2026ஆம் ஆண்டில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 20 கிராமங்களை உள்ளடக்கிய 5,476 ஏக்கர் பரப்பில் சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
அதற்கான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. இதனால் குடியிருப்புகள், விளைநிலம், நீர்நிலைகள் பாதிக்கப்படும் எனக் கூறி, பரந்தூரைச் சுற்றியுள்ள 13 கிராம மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, பரந்தூா் விமான நிலையம் அமையவிருக்கும் இடங்கள் குறித்து ஆய்வு நடத்த தமிழக அரசு, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் ஒரு குழுவை ஏற்படுத்தியது. அக்குழு, பரந்தூரைச் சுற்றியுள்ள கிராமங்களை ஆய்வு செய்து, அறிக்கை அளித்தது.
அதன் அடிப்படையில், பரந்தூர் விமான நிலையத்திற்குத் தேவையான 5,746 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த தமிழக தொழில்துறை அனுமதி அளித்துள்ளது. அதில் 1,972 ஏக்கர் நிலமும் 3,774 ஏக்கர் தனியார் பட்டா நிலமும் அடங்கும். கடந்த ஆண்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பரந்தூர் புதிய விமான நிலையம் அமைக்க நில எடுப்புக்கான முதல் நிலை அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில், பரந்தூர் புதிய விமான நிலையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சிடம் விண்ணப்பித்துள்ளது. அவ்விண்ணப்பத்தை மத்திய சுற்றுச்சூழல் வல்லுநர் மதிப்பீட்டுக் குழு ஜூன் 28ஆம் தேதி பரிசீலிக்கவுள்ளது.
பரந்தூர் விமான நிலையக் கட்டுமானப் பணிகள் நான்கு கட்டங்களாக இடம்பெறும் என்றும் அதற்கு ரூ.32,704 கோடி செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மூவாண்டுகளில் பணிகளை முடித்து, 2029ஆம் ஆண்டில் அவ்விமான நிலையத்தைத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.