சென்னை: நடப்பு நிதியாண்டில் சென்னை ரயில்வே 2,600 கிலோவாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள ரயில்வே கோட்டங்களிலும் சூரிய சக்தி மூலம் மின்னுற்பத்தி செய்வதற்கு தேவையான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை ரயில்வே பிரிவில் ஏற்கெனவே உள்ள உள்கட்டமைப்பு விரிவுபடுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த நிதியாண்டில் சென்னையில் உள்ள பரங்கிமலை ரயில் நிலையம், ஆவடியில் உள்ள மண்டல மின்சார இழுவைப் பயிற்சி மையம், ஆண்கள் விடுதி, கிண்டி ரயில் நிலையம் ஆகியவற்றில் மொத்தம் 140 கிலோவாட் திறன் கொண்ட புதிய சூரிய சக்தி ஆலைகள் நிறுவப்பட்டன.
இதன் மூலம் ஆண்டுதோறும் ஏறக்குறைய 2.4 லட்சம் யூனிட் பசுமை மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்றும், இதனால் ஆண்டுதோறும் மின் உற்பத்திச் செலவு ரூ.19.21 லட்சம் வரை குறையும் என்றும் ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் (2026-27) 2,600 கிலோவாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய இந்திய ரயில்வே துறை இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மின்னுற்பத்தி மட்டுமல்லாமல், கரிம வெளியேற்றத்தைக் குறைத்தல், எரிசக்திப் பாதுகாப்பு, பாரம்பரிய மின் ஆதாரங்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை கோட்டத்தின் மொத்த சூரியசக்தி திறன் 2,494.5 கிலோவாட்டை எட்டி உள்ள நிலையில், கடந்த நிதியாண்டில், 23.15 யூனிட் சூரிய சக்தியை உற்பத்தி செய்துள்ளது. இதன் மூலம் ரூ.1.43 கோடி சேமிப்பை ஈட்டியுள்ளது என்றும் அறிக்கை ஒன்றில் சென்னை ரயில்வே தெரிவித்துள்ளது.

