சென்னை: உலக மக்களைப்போல தமிழ்நாட்டு மக்களும் புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர்.
குறிப்பாக, தலைநகர் சென்னையில் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.
சென்னை நகரின் பெரும்பாலான தெருக்களில் இளைஞர்கள் நட்சத்திர வடிவில் 2026ஆம் ஆண்டு வாசகம் பொறிக்கப்பட்ட பதாகையை கட்டித் தொங்கவிட்டிருந்தனர்.
புத்தாண்டைக் கொண்டாட ஆயிரமாயிரம் பேர் படையெடுத்து வந்து குவியும் மெரினா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ஆம்தேதி இரவு உற்சாகம் கரை புரண்டு ஓடும்.
வழக்கமாக, இரவு 8 மணிக்கே மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் புதன்கிழமை (டிசம்பர் 31) இரவு 10 மணிக்கு மேலாகியும் மக்கள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது.
நள்ளிரவை நெருங்கியபோது மக்கள் கூட்டம் ஓரளவு காணப்பட்டது.
காவல்துறை டிஜிபி அலுவலகம் எதிரே உள்ள மணிக்கூண்டின் கடிகார முள் 12 மணியைத் தொட்டவுடன், ‘ஹாப்பி நியூ இயர்’ ‘புத்தாண்டு வாழ்த்து’ என அங்கு திரண்டிருந்த கூட்டம் எழுப்பிய முழக்கங்கள் விண்ணை முட்டின.
மெரினா கடற்கரையில் உற்சாகம் குறைந்திருந்த நிலையில் பெசன்ட் நகர் கடற்கரையில் மக்கள் அது பன்மடங்காகப் பெருகி இருந்ததைக் காணமுடிந்தது.
தொடர்புடைய செய்திகள்
சாந்தோம், பெசன்ட் நகர், மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட தேவாலயங்களில் நள்ளிரவு புத்தாண்டு சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.
பிரார்த்தனை முடிந்தவுடன் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துகளை இன்முகத்துடன் பகிர்ந்துகொண்டனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாத வகையில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சென்னையில் காவல்துறை ஆணையர் அருண் உத்தரவின் பேரில் 19 ஆயிரம் காவல்துறையினர் புத்தாண்டு பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில் காவல்துறையினர் அதிகளவில் பாதுகாப்பு மற்றும் சுற்றுக்காவல் பணிகளில் ஈடுபட்டனர்.
வானூர்தி கேமராக்கள் மூலமாக மக்கள் கூட்டத்தை காவல்துறை அதிகாரிகள் கண்காணித்தனர்.
இந்த நிலையில், சென்னையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது விபத்தால் உயிரிழப்புகள் இல்லை எனவும் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் மாநகரக் காவல்துறை அறிவித்துள்ளது.
சென்னை மாநகர் முழுவதும் 19,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதுடன் 425 இடங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்பட்டதால் குற்றச் சம்பவங்கள் நடைபெறவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

