சென்னை: தமிழகத் தலைநகர் சென்னையிலுள்ள தனியார் பள்ளி ஒன்றுக்கு ஒன்பதாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகரில் செட்டிநாடு வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், திங்கட்கிழமை பிற்பகல் அப்பள்ளிக்கு காவல்துறை உயரதிகாரி சங்கர் ஜிவால் பெயரில் போலி மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதுகுறித்து உடனடியாக பள்ளி நிர்வாகம் பட்டினப்பாக்கம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு வல்லுநர்கள், மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். ஏறக்குறைய ஒரு மணிநேரம் நடத்தப்பட்ட சோதனையில் எந்தவிதமான வெடிபொருளும் கிடைக்காததால், மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது.
இதுவரை அப்பள்ளிக்கு ஒன்பது முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் தொடர் மிரட்டல் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு இணையக் குற்றப் பிரிவினரும் பட்டினப்பாக்கம் காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, சென்னை மடிப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் மவுன்ட் ராணுவப் பள்ளிக்கும் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மோப்ப நாய் துணையுடன் சோதனை நடத்தப்பட, அங்கும் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, அம்மிரட்டலும் புரளி எனத் தெரியவந்தது.
அண்மைக்காலமாக சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது அதிகரித்து வருவது, பள்ளிகள் வட்டாரத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.