சென்னை: அண்மையில் தமிழகம் முழுவதும் பெய்த கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.
குறிப்பாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஐந்து ஏரிகளில் மொத்தம் 95.75% நீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னைக்கு செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன் கோட்டை ஆகிய ஐந்து ஏரிகளில் இருந்து நீர் விநியோகம் செய்யப்படுகிறது.
எனவே, பருவமழைக் காலங்களில் இந்த ஐந்து ஏரிகளும் நிரம்பினால் மட்டுமே சென்னையில் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.
இந்நிலையில், இந்த ஆண்டு பருவ மழை சிறப்பான அளவில் பதிவாகியுள்ளது. இதனால் சென்னையில் குடிநீர் ஆதாரங்களாக உள்ள ஐந்து ஏரிகளும் நிரம்பியுள்ளன.
ஐந்து ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,757 டிஎம்சி ஆகும். தற்போது நீர் இருப்பு 11,183 டிஎம்சியாக உள்ளது. குறிப்பாக செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
எனவே, அடுத்த ஆண்டு கோடைக் காலத்தில் சென்னையில் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புகள் குறைவு எனக் குடிநீர் வழங்கும் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

