கோவை: சென்னையில் உள்ள குடியிருப்புக் கட்டடத்தின் நான்காவது மாடி பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தை மீட்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அதன் தாயார் ரம்யா, 33, கோயம்புத்தூர் மாவட்டம், காரமடையில் உயிரை மாய்த்துக்கொண்டார்.
சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் கடந்த மாதம் தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், பால்கனி கூரையில் வெங்கடேஷ்-ரம்யா தம்பதியின் ஏழு மாத பெண் குழந்தை தவறி விழுந்தது.
அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலானது.
இந்நிலையில், கடந்த 15 நாள்களுக்கு முன்பு கோவை காரமடை பெள்ளாதி பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு குழந்தையுடன் ரம்யா சென்றிருந்தார்.
அவருடைய பெற்றோர் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சனிக்கிழமை வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த ரம்யா உயிரை மாய்த்துக்கொண்டார்.
இது தொடர்பாக காரமடை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
“குழந்தை தவறி விழுந்த சம்பவத்தில், தாயார் ரம்யாவை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். அக்கம்பக்கத்தில் வசிப்போரும் அவரைக் கண்டித்துள்ளனர். இதனால் கடும் மன அழுத்தத்துக்கு உள்ளான ரம்யா, பெற்றோர் வீட்டுக்குச் சென்று உயிரை மாய்த்துக்கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது,” என்று காவல்துறையினர் திங்கட்கிழமை (மே 20) கூறினர்.
ரம்யாவின் மரணம் தொடர்பில் விசாரணை தொடர்கிறது.

