தஞ்சாவூர்: தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்த சென்னையைச் சேர்ந்த ஐந்து இளையர்கள் ஆற்றில் மூழ்கினர். இருவரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மூவரைத் தேடும் பணியில் காவல் துறையினரும் தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை எக்மோர் பகுதியைச் சேர்ந்த ஜான்சன் என்பவரின் மகன்கள் பிராங்கிளின் (23), ஆண்டோ (20) ,அதே பகுதியைச் சேர்ந்த ஜியாவுதீன் மகன் தமிழரசன் (20), சென்னை சோலைப் பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் கலைவேந்தன் (20), ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த மண்ட வெங்கடேஷ் மகன் மனோகர் (19) ஆகிய ஐவரும் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா கோவிலுக்குச் சென்றனர்.
பூண்டி சந்தன மாதா கோவில் அருகே ஓடும் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி அவர்கள் குளித்தனர். எதிர்பாராதவிதமாக அவர்கள் ஐவரும் ஆற்றில் மூழ்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இவர்களில் கலை வேந்தன், தமிழரசன் ஆகியோரின் உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டது.
ஆற்றில் மூழ்கிய மற்ற மூவரையும் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு துறையினரும் காவல்துறையினரும் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

