தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதல்வர், அதானி சந்திப்பு நிகழவில்லை: செந்தில் பாலாஜி

2 mins read
eab4d801-003a-479b-a924-b89deb238f9f
அமைச்சர் செந்தில் பாலாஜி. - படம்: ஊடகம்

சென்னை: முதல்வர் ஸ்டாலின், தொழிலதிபர் அதானி இடையே எந்தவிதச் சந்திப்பும் நிகழவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

அதானி நிறுவனத்துடன் நேரடியாகச் சூரிய ஒளி மின்சாரம் பெற, தமிழக அரசு எந்த ஒப்பந்தமும் செய்துகொள்ளவில்லை என்றும் இது குறித்து பொய்த் தகவல்களைப் பரப்புவோர் மீது கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

தொழிலதிபர் அதானி அண்மையில் தமிழகம் வந்தபோது முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியானது.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், “அதிக விலைகொடுத்து அதானியிடம் இருந்து சூரிய ஒளி மின்சாரம் பெற ஒப்பந்தம் போட்டிருப்பது போல எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் கற்பனையான தகவலைக் கட்டுக்கதைகள் போல் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.

“முதல்வர் அதானியைச் சந்திக்கவும் இல்லை. அதானி நிறுவனத்துடன் நேரடியாகச் சூரிய ஒளி மின்சாரம் பெற எந்த ஒப்பந்தமும் போடவும் இல்லை,” என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் நிர்வாக ரீதியாகவும் நிதிநிலைமை ரீதியாகவும் முற்றிலும் சீர்குலைந்திருந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தை அடுத்தடுத்த நிர்வாகச் சீர்திருத்த மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கை மூலம், இன்றைக்குத் தமிழ்நாடு மின்சார வாரியத்தை திமுக அரசு தலைநிமிர வைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசு கடந்த மூன்று ஆண்டு காலமும் மின்சார கொள்முதல் குறித்து எந்த ஒரு தனியார் நிறுவனத்துடனும் எவ்வித ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை என்றும் கடந்த அதிமுக ஆட்சியைவிட குறைவான விலையில் திமுக அரசு சூரிய ஒளி மின்சாரத்தை வாங்குவதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்