முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

1 mins read
34676064-a7dc-49e8-badf-176c43132f3e
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். - படம்: ஊடகம்

ராமநாதபுரம்: முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமையன்று பசும்பொன் சென்றார்.

முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தி விழா, 68வது குரு பூஜை திங்கள்கிழமை தொடங்கியது.

இதையடுத்து, அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் என ஏராளமானோர் விழா நடைபெறும் இடத்துக்கு நேரில் வந்து காலஞ்சென்ற தேவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், புதன்கிழமையன்று தேவர் குரு பூஜை நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் நடைபெற்ற அரசு விழாவில், ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு முத்துராமலிங்க தேவரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர், மற்ற அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். குரு பூஜை நிகழ்வையொட்டி பசும்பொன், கமுதி உள்ளிட்ட பகுதிகள் காவல்துறையின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 10,000க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பதற்றமான பகுதிகளில் காவல்துறை சோதனைச் சாவடிகளை அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருந்தது.

இதற்கிடையே, தேவர் ஜெயந்தி விழாவில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

குறிப்புச் சொற்கள்