தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேளையும் உணவு; இந்தியாவிலேயே முதல் முயற்சி

ஆண்டு ஒன்றுக்கு ரூ.213.92 கோடி ஒதுக்கீடு; 129,689 பேர் பயன் பெறுவர்

தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேளையும் உணவு; இந்தியாவிலேயே முதல் முயற்சி

1 mins read
தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு சார்பில் உணவு வழங்கும் திட்டம், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதல் முறையாக செயல்படுத்தப்படுகிறது.
5d20d9b5-81a8-4d89-8855-40abb4f2190f
தூய்மைப் பணியாளர்களுக்கு முக்கால உணவளிக்கும் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்து அவர்களுடன் இணைந்து உண்டு மகிழ்ந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். - படம்: விடுதலை

சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 9) திருவள்ளூர் அருகே உள்ள போலிவாக்கத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கான விரிவாக்கம் செய்யப்பட்ட மூன்று வேளை உணவு வழங்கும் திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார்.

இந்த உன்னதமான திட்டத்தின் வாயிலாக மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 1.29 லட்சம் தூய்மைப் பணியாளர்கள் இனி நாள்தோறும் பயன் பெறுவர்.

பணியாளர்களுக்கு உரிய நேரத்திற்குள் தரமான உணவை அளிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட சிறப்பு உணவு வாகனச் சேவையை முதல்வர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்களின் குடும்ப நலனைக் கருத்தில்கொண்டு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

நிகழ்வின் சிறப்பம்சமாக, முதல்வர் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவினைப் பரிமாறியதோடு, அவர்களுடன் இணைந்து அமர்ந்து உணவு உண்டு மகிழ்ந்தார். பின்னர் அவர்களுடன் கலந்துரையாடி குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்த திட்டம் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 25 மாநகராட்சிகள், 145 நகராட்சிகள், 479 பேரூராட்சிகளில் பணிபுரியும் 129,689 தூய்மைப் பணியாளர்கள் பயன் பெற உள்ளனர்.

இத்திட்டத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.213.92 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு சார்பில் உணவு வழங்கும் திட்டம், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதல் முறையாக செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்