தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிலைகளைக் காணொளி மூலம் திறந்து வைத்தார் முதல்வர்

2 mins read
4de4f8ed-138f-43a6-9e25-089b48b13bb4
முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்த வெண்ணி காலாடி, குயிலி, எத்தலப்பர் நாயக்கர் சிலைகள். - படம்: ஊடகம்

சென்னை: வெண்ணி காலாடி, குயிலி, எத்தலப்பர் நாயக்கர் சிலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தென்காசி, திருப்பூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் ரூ.3.6 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவச் சிலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், 2023-24ஆம் ஆண்டுக்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக்கோரிக்கையில், சுதந்திரப் போராட்ட வீரர் வெண்ணி காலாடியின் நினைவைப் போற்றும் வகையில் உருவச்சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பின்படி தென்காசி மாவட்டம், நெல்கட்டும் செவல் கிராமம், பச்சேரியில் ரூ.50 லட்சம் செலவில் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

அதேபோல், வீராங்கனை குயிலிக்கு சிவகங்கையில் உருவச்சிலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சிவகங்கை வட்டம், ராகினிப்பட்டியில் அமைந்துள்ள வேலுநாச்சியார் மணிமண்டப வளாகத்தில் குயிலிக்கு ரூ.50 லட்சம் செலவில் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

மேலும், சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கரின் வீரத்தைப் போற்றி ரூ.2 கோடியே 60 லட்சம் செலவில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் எத்தலப்பர் நாயக்கருக்குச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதோடு தளியில் எத்தலப்பர் நாயக்கருக்கு நினைவு அரங்கமும் கட்டப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ரா.வைத்திநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்