சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறக்கமின்றி 24 மணிநேரமும் மக்களுடைய நலனுக்காக இயங்கிக் கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் கூறினார்.
அமைச்சர் சேகர் பாபு பதிலடி
சென்னை பட்டாளம் பகுதியில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். தாழ்வான பகுதிகளில் உள்ள மழைநீரை அகற்றும் பணியைப் பார்வையிட்டு வருகின்றனர்.
பட்டாளம் பகுதியில் ஆய்வு செய்த பின் அமைச்சர் சேகர் பாபு பேட்டி அளித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் கூறியதாவது: சென்னையில் நேற்று 200 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் ஒரு சில இடங்களில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதிக திறனுள்ள 600 ஹெச்.பி. மின் மோட்டார்களைக் கொண்டு மழைநீர் வெளியேற்றப்படுகிறது. அரசு நடவடிக்கைகளால் வெள்ள பாதிப்பை திறமையோடு எதிர்கொண்டதாக மக்கள் பாராட்டுகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறக்கமின்றி 24 மணிநேரமும் மக்களுடைய நலனுக்காக இயங்கிக் கொண்டிருக்கிறார். எங்களையும் இயக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எவ்வித மழை, வெள்ள பாதிப்பு பணிகளையும் நேரில் ஆய்வு செய்ததில்லை. 2 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பின்போது கூட எடப்பாடி பழனிசாமியின் கார் டயர் கூட எங்கும் செல்லவில்லை. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை வருவதற்கு முன்பே மக்களைச் சந்தித்து ஆய்வு மேற்கொண்டார் என்று கூறியுள்ளார்.