தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘மக்களுடன் முதல்வர்’: ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு

1 mins read
71e4edd1-8b6b-4748-b928-66ef08d845e9
‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை 2023 டிசம்பர் 18ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

சென்னை: ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின்கீழ் ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டு உள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“அரசின் சேவைகளைப் பெற மக்கள் அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் நிலையிலிருந்து அரசின் சேவைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் தொலைநோக்குத் திட்டமான ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை 2023 டிசம்பர் 18ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

“இந்தத் திட்டத்தின்மூலம் 15 அரசுத் துறைகளின் சேவைகளை ஒருங்கிணைத்து பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல் போன்ற 44 அடிப்படைப் பொதுச் சேவைகள் வழங்கப்படுகின்றன.

“பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்ற 30 நாள்களுக்குள் அரசின் முக்கியச் சேவைகளை அவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் நோக்கத்துடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

“திட்டம் தொடங்கப்பட்டு, முதற்கட்டமாக நகர்ப்புறங்களில் 2,058 முகாம்கள் நடத்தப்பட்டு, 9.05 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டன. நகர்ப்புற மக்களிடையே இத்திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பையடுத்து ஊரகப் பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதுவரை 2,344 முகாம்கள் மூலம் 12.525 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

“இந்த முகாம்களின் மூலம் இதுவரை மக்களிடமிருந்து பெறப்பட்ட 12.80 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. திட்டம் தொடங்கப்பட்ட ஒரே ஆண்டில் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது,” என்று அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தமது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

குறிப்புச் சொற்கள்