கச்சத்தீவை திமுக தாரைவார்த்ததாகக் கூறுவது தவறு: ஸ்டாலின்

கச்சத்தீவை திமுக தாரைவார்த்ததாகக் கூறுவது தவறு: ஸ்டாலின்

2 mins read
பிரதமர் மோடிக்குப் பனை ஓலை பெட்டகத்தை பரிசளித்த தமிழக முதல்வர்
6a763cd6-0dfa-46a2-8ca4-ae5695d6559b
பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னை மெட்ரோ திட்டம், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதை தடுப்பது, பள்ளிக் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுவை அளித்தார். - படம்: ஊடகம்

புதுடெல்லி: கச்சத்தீவை திமுக தாரைவார்த்ததாகக் கூறுவது தவறு. கச்சத்தீவை மீட்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் என்று டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியபோது தெரிவித்தார்.

டெல்லியில் பிரதமர் மோடியை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார்.

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் வியாழக்கிழமை இரவு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், வெள்ளிக்கிழமை காலை  11 மணியளவில் பிரதமருடன் அமர்ந்து 45 நிமிடங்கள் பேசினார்.

தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக நெல்லையில் தயாரிக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழைநார் கூடை, பனை ஓலை பெட்டகத்தை பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் பரிசளித்தார்.

பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, தமிழகத்துக்கான நிதிகளை விடுவிக்கும்படி அவர் கோரிக்கை மனு அளித்தார்.

முதல்வரின் மூன்று முக்கிய கோரிக்கைகள்:

* சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டப் பணிகளுக்கான மத்திய அரசின் பங்காக ரூ.7,425 கோடி நிதியை வழங்க வேண்டும்.

* பள்ளி கல்வித்துறைக்கான சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே விடுவிப்பது அவசியம்.

* மீனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுக்கவேண்டும் ஆகியவையே அந்தக் கோரிக்கைகள்.

அதன்பின்னர் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியபோது, “வழக்கமாக 15 நிமிடம் ஒதுக்கும் பிரதமர் மோடி, இப்போது 45 நிமிடங்கள் நேரம் தந்தார். மூன்று முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினேன்.

“மீனவர் விவகாரம் குறித்து இலங்கையின் புதிய அதிபரிடம் தெரிவிக்கும்படி பிரதமரிடம் கேட்டுக்கொண்டேன். இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்கள், 191 படகுகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும் வலியுறுத்தியுள்ளேன். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கும்படி பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

“நான் ஒரு முதல்வராகப் பிரதமரைச் சந்தித்தேன். அவரும் ஒரு பிரதமராக எனது கோரிக்கைகளைக் கேட்டுக்கொண்டார்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்