சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நேற்று (செப்டம்பர் 22), கிராமச் சுகாதாரத் தாதியர்க்கான 1,231 பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்யப்பட்டோர்க்கு அதற்கான பணி நியமன ஆணைகளை வழங்கியதாகத் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
அவர்கள் அரசுத் தாதியர் பயிற்சிப் பள்ளியில் பயின்றவர்கள் என்று கூறப்பட்டது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
மாநிலம் முழுவதும் கிராமப்புறங்களில் 5,000 பேருக்கு ஒரு துணைச் சுகாதார நிலையமும் நகர்ப்புறங்களில் 10,000 பேருக்கு ஒரு துணைச் சுகாதார நிலையமும் இயங்கி வருகின்றன.
இந்த ஆண்டு (2025) மக்கள் தொகைக்கேற்ப மேலும் 642 துணைச் சுகாதார நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றையும் சேர்த்து தற்போது கிராமப்புறங்களில் 8,713 துணைச் சுகாதார நிலையங்களும் நகர்ப்புறங்களில் 2,368 துணைச் சுகாதார நிலையங்களும் இயங்கி வருகின்றன.
இந்தத் தகவல்கள் அரசின் செய்திக்குறிப்பில் இடம்பெற்றுள்ளன.
கிராமப்புறச் சுகாதார நிலையங்களில் கிராமச் சுகாதாரத் தாதியரும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் துணைத் தாதியரும் பணிபுரிந்து வருகிறார்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற வழக்கில் தடையாணை காரணமாகத் துணைச் சுகாதார நிலையங்கள், ஆரம்பச் சுகாதார நிலையங்களில் காலியாக இருந்த கிராமச் சுகாதாரத் தாதியர்கள், துணைத் தாதியர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பணியிடங்களை நிரப்பத் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு, தற்பொழுது உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் வழிகாட்டுதலின்கீழ், அரசுப் பயிற்சிப் பள்ளியில் 2023ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதிக்கு முன்னர் தேர்ச்சி பெற்ற 1,231 பேர் கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மீதமுள்ள 2,417 காலிப் பணியிடங்கள், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் நிரப்பப்படும் என்றும் கூறப்பட்டது.

