சென்னை: மறைந்த நடிகர் ஜெய் சங்கர் வசித்து வந்த நுங்கம்பாக்கம் கல்லூரிப் பாதை ஜெய்சங்கர் சாலை எனப் பெயர் மாற்றம் கண்டுள்ளது.
‘ஜெய் சங்கர் சாலை’ என்னும் பெயர்ப் பலகையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார்.
முன்னொரு காலத்தில் ‘ஜேம்ஸ்பாண்ட்’ என்று தமிழ்த் திரையுலக ரசிகர்களால் அழைக்கப்பட்ட ஜெய் சங்கர், 1964ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரிப் பாதையில் வசித்து வந்தார்.
2000 ஜூன் மாதம் தமது 61வது வயதில் ஜெய் சங்கர் காலமானார்.
அவரது நினைவைப் போற்றும் வகையில், அவர் வசித்த கல்லூரிப் பாதைக்கு ஜெய் சங்கரின் பெயரைச் சூட்டுமாறு அவரது மகன் விஜய் சங்கர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்து இருந்தார்.
அந்தக் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இதேபோன்று, சென்னை மந்தைவெளி 2வது குறுக்குத் தெருவிற்கு, நடிகரும் அரசியல் பிரமுகருமான எஸ்.வி. சேகரின் தந்தை பெயரில் ‘எஸ்.வி. வெங்கடராமன் தெரு’ என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. அதற்கான பெயர்ப் பலகையையும் ஸ்டாலின் திறந்து வைத்தார்.