தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
‘பாஜகவுடன் ரகசிய உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை’

எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் பதிலடி

2 mins read
a1448dc4-952e-4d44-a429-e7f9dc71d4d9
ஞாயிற்றுக்கிழமை நடந்த கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: பாஜகவுடன் திமுக எந்தவிதமான ரகசிய உறவும் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றதால் மகிழ்ச்சியில் தூக்கம் வரவில்லை என்றார் அவர்.

விழாவுக்கு ராகுல் காந்தியை ஏன் அழைக்கவில்லை என பழனிசாமி கேள்வி எழுப்பியதற்கு, “கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா திமுக நடத்திய நிகழ்ச்சி அல்ல, இது மத்திய அரசின் நிகழ்ச்சி என்பதை எதிர்க்கட்சித் தலைவர் புரிந்துகொள்ள வேண்டும்,” என திரு ஸ்டாலின் கூறினார்.

இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அழைத்து நிகழ்ச்சி நடத்தியதால் திமுக, பாஜகவுடன் உறவு வைத்திருக்கிறது என்ற ஒரு செய்தியைக் கிளப்பியுள்ளதாகவும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பேசிக் கொண்டிருப்பதாகவும் திரு ஸ்டாலின் சொன்னார்.

திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.சங்கரின் இல்லத் திருமண விழாவில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 19) திரு ஸ்டாலின் உரையாற்றியபோது இவ்வாறு விளக்கமளித்துப் பேசினார்.

பழனிசாமியின் விமர்சனத்துக்குப் பதிலடி கொடுத்த திரு ஸ்டாலின், “திமுகவினர் பேசுவதைவிட அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞர் குறித்து சிறப்பாகப் பேசினார். கலைஞரைப் பற்றி உள்ளத்திலிருந்து அவர் உண்மையைப் பேசியதை சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை,” என்றார்.

“பொதுவாக தலைவர்களுக்கு நாணயம் வெளியிடும்போது இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே அது இருக்கும். அண்ணா, கலைஞர் பெயரிலான நாணயத்தில் மட்டுமே தமிழ் இடம்பெற்றுள்ளது. அதுவும், கலைஞர் பெயரிலான நாணயத்தில் ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது,” என்பதை திரு ஸ்டாலின் பெருமிதத்துடன் சுட்டினார்.

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) வெளியிடப்பட்டது. தமது சென்னை பயணத்தின் ஒரு பகுதியாக, கலைஞரின் நினைவிடத்தைப் பார்க்க வேண்டும் என விரும்பிய அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.

குறிப்புச் சொற்கள்