சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் அடையாறு ஆற்றின் கீழே செல்லும் பகுதி உட்பட மொத்தம் 1.218 கி.மீ. தூரத்தைக் கடந்து அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையப் பகுதியில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெளிவரும் பணியினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை(பிப்ரவரி 13) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத்தின் கட்டுமானப் பணிகள் மூன்று வழித்தடங்களில் 118.9 கி.மீ. நீளத்தில் 128 ரயில் நிலையங்களுடன் 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
இப்பணிக்காக 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, இரண்டாவது கட்டத்தில் மொத்தம் 42.6 கி.மீ. நீள சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வழித்தடம் 3ல் மட்டும் 26.7 கி.மீ நீளத்தில் மாதவரம் – கெல்லீஸ் மற்றும் கெல்லீஸ் –தரமணி ஆகிய இரண்டு பகுதிகளாக சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் இரண்டாவது பகுதியான கெல்லீஸ் முதல் தரமணி வரையிலான சுரங்க வழித்தடப் பகுதியில் கிரீன்வேஸ் மெட்ரோ நிலையம் முதல் அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் வரை வருகிறது.
சுரங்கம் தோண்டும் இயந்திரம் அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் அருகில் வெளிவந்தது. இந்த முக்கியமான பணியினை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, இப்பணிகள் அனைத்தையும் உரிய காலத்தில் முடித்துத் தருமாறு அலுவலர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

