சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்ட அமெரிக்கப் பயணம் தோல்வியடைந்துவிட்டதாக பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 3) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் 17 நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் ரூ.7,616 கோடி முதலீட்டை ஈர்ப்பதற்கான உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளனர். ஒப்பீட்டளவில் பார்க்கும் போது இது மிக மிகக் குறைவு ஆகும்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “தொழில் முதலீட்டை ஈர்க்க தமிழக அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நிறுவனங்களில் பெரும்பாலானவை ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வருபவை தான். உலகில் நான்காம் தலைமுறை தொழில் புரட்சி நடைபெற்று வரும் நிலையில் அத்தகைய நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வருவது இயல்பாக நடக்கக்கூடியது.
அதற்காக முதல்வர் தம்மை வருத்திக்கொண்டு அமெரிக்கா சென்றிருக்கத் தேவையில்லை.
தெலுங்கானா முதல்வராக கடந்த ஆண்டு பொறுப்பேற்ற ரேவந்த் ரெட்டி, கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை 8 நாள்கள் மட்டுமே அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டு, ரூ.31,500 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து வந்திருக்கிறார்.
அந்த வகையில் தமிழக முதல்வரின் அமெரிக்கப் பயணம் தோல்வியடைந்துள்ளது,” என்று ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

