சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள ஏறக்குறைய 700 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இவை அனைத்தும் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்களில் இருந்து 500 மீட்டர் வரையிலான அமைந்துள்ள கடைகள் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இக்கடைகளை இரண்டு வாரத்துக்குள் மூடுமாறு திரு விஜய் உத்தரவிட்டுள்ளதாகத் தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய், தொடக்கத்திலேயே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு, புதுத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். அவற்றுள், 717 மதுபானச் சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்துக்குள் மூடும் உத்தரவும் அடங்கும்.
தமிழகம் முழுவதும் தற்போது மாநில வணிகக் கழகத்தால் 4,765 மதுபானச் சில்லறை விற்பனைக் கடைகள் நடத்தப்பட்டு வருகிறது.
அவற்றுள், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் போன்றவற்றுக்கு 500 மீட்டர் வரையிலான தொலைவில் அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறியுமாறு முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டிருந்த நிலையில், 717 மதுபானச் சில்லறை விற்பனைக் கடைகள் அடையாளம் காணப்பட்டதாக அரசு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
“மேலும், பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்களுக்கு அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபானச் சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரத்துக்குள் மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்,” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2023ஆம் ஆண்டு தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகே செயல்பட்டு வந்த 500 மதுக்கடைகள் தமிழக அரசால் மூடப்பட்டதாக இந்து தமிழ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

