டெல்லி செல்லத் தயாராகும் முதலமைச்சர் விஜய்

டெல்லி செல்லத் தயாராகும் முதலமைச்சர் விஜய்

2 mins read
20e6a56f-2123-44d2-b1ac-9c45e166027c
கடந்த வாரம் தமிழகத்தின் நிதி நிலைமை தொடர்பாக, நிதித் துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். - படம்: தமிழக முதலமைச்சர் அலுவலகம்

சென்னை: தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் விரைவில் டெல்லி செல்வார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்தப் பயணத்தின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரைத் திரு விஜய் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.

ஏற்கனவே, பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசப் பிரதமர் அலுவலகத்தில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. ஆனால், தொடர்ச்சியாக மோடி, அரசு நிகழ்ச்சிகளிலும், கட்சிப் பணிகளிலும் பங்கேற்று வருவதால் இன்னும் நேரம் ஒதுக்கப்படவில்லை.

நேரம் கிடைத்ததும் உடனடியாக முதலமைச்சர் விஜய் டெல்லி செல்வார் என்று கூறப்படுகிறது.

டெல்லி பயணத்தின்போது, அரசியல் ரீதியான சந்திப்புகள் மட்டுமின்றி, தமிழகத்தின் மிக முக்கிய பொருளியல் தேவைகள் தொடர்பாகவும் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கும் வகையிலும் திரு விஜய் செயல்படுவார் என்று கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் தமிழகத்தின் நிதி நிலைமை தொடர்பாக, நிதித் துறை உயர் அதிகாரிகளுடன் திரு விஜய் ஆலோசனை நடத்தினார்.

நிதி நெருக்கடியைச் சமாளிக்க, மத்திய அரசுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிப்பதுதான் சரியாக இருக்கும் என்று அதிகாரிகள் முதலமைச்சர் விஜய்யிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அதிகாரிகளின் அறிவுரையை முதலமைச்சர் விஜய்யும் ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.

இதனால், பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது, தமிழகத்திற்குத் தேவையான கோரிக்கைகளைக் கேட்டுப்பெறுவது தொடர்பாகப் பட்டியல் தயாரிப்பது குறித்த ஆரம்பக்கட்டப் பணிகள் தொடங்கிவிட்டன.

டெல்லி வருகை குறித்து ராகுல்காந்தியிடம் தொலைபேசி மூலம் முதலமைச்சர் விஜய் தகவல் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திரு விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்தனர்.

இது தொடர்பான விசாரணைக்காகக் கடந்த ஜனவரி மாதம் தவெக தலைவராக சி.பி.ஐ. முன்பு திரு விஜய் முன்னிலை ஆனார். தற்போது அவர் தமிழ் நாட்டின் முதலமைச்சராக டெல்லிக்குச் செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்