தமிழ்நாடு முழுவதும் 50 ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து

தமிழ்நாடு முழுவதும் 50 ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து

2 mins read
dd40ed50-5a0b-4e73-89bd-e10a61a40c58
முதல்வர் விஜய் நகராட்சி நிர்வாகத் துறையை தன் பொறுப்பில் வைத்துள்ளார். - கோப்புப் படம்: புதிய தலைமுறை

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நகராட்சி நிர்வாகத்துறையின் 50 குறுகிய கால ஒப்பந்தப்புள்ளிகளை தமிழ்நாட்டு முதல்வர் விஜய் ரத்து செய்துள்ளார்.

ஒப்பந்தப்புள்ளிகளை அளிக்க அதிகபட்சமாக நான்கு நாள்கள் மட்டுமே அளிக்கப்பட்டதாகவும் பல ஒப்பந்தப்புள்ளிகள் விதிமுறைகளை மீறி ஏற்கப்பட்டு பணிகள் ஒதுக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், பல்வேறு நகராட்சிகள் ஏற்றுக்கொள்வதாக அறிவித்த 50 குறுகியகால ஒப்பந்தப் புள்ளிகளை ரத்து செய்து முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதிகபட்சமாக, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் 30 ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து செய்யப்பட்டன.

மேலும் கோத்தகிரி, செங்கம், பெரம்பலூர், திருவள்ளூர், மணப்பாறை, திருவையாறு உள்ளிட்ட நகராட்சிகளில் 20 ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கழிவுநீர் வடிகால் பராமரிப்பு, குடிநீர் இணைப்புப் பணி, வாரச்சந்தை கடைகள், புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி தொடர்பான ஒப்பந்தப்புள்ளிகள்தான் அதிக எண்ணிக்கையில் ரத்து செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, முதல்வர் விஜய் தலைமையில் வியாழக்கிழமை (ஜூலை 16) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சென்னை திருவான்மியூர்-உத்தண்டி பகுதிகளை இணைக்க நான்கு வழித்தட உயர்நிலை சாலை அமைக்கும் திட்டத்தை ரத்துச் செய்ய முடிவெடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நகராட்சி நிர்வாகத் துறையை தன் பொறுப்பில் வைத்துள்ளார் முதல்வர் விஜய். சென்னை மாநகராட்சியில் ஒப்பந்தப்புள்ளிகள் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்ததையடுத்து பல ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து செய்யப்பட்டன.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

பின்னர் போக்குவரத்துத் துறையின் ஒப்பந்தப்புள்ளிகள் சிலவும்கூட ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின்னர், லஞ்ச ஒழிப்பு குறித்து தீவிரமாகப் பேசி வருகிறார். அதனடிப்படையில் தற்போது அவர் வசம் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையில் ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

இதே போல, கடந்த 2021ல் திமுக புதியதாக ஆட்சி பொறுப்புக்கு வந்தபோது சென்னை மாநகராட்சியில் மட்டும் 250க்கும் மேற்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்