முழு வீச்சில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முதல்வர்கள் உத்தரவு

2 mins read
c935e2a6-93d8-4624-b003-e6f632f33f45
ஃபெங்கல் புயல், கனமழை காரணமாக சென்னை பட்டாளம் பகுதியில் மழைநீர் சூழ்ந்து உள்ளதால் படகு மூலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தொடர்கிறது. - படம்: ஊடகம்
multi-img1 of 5

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயல் சனிக்கிழமை இரவு (நவம்பர் 30) கரையைக் கடக்கவுள்ள நிலையில், நிவாரண நடவடிக்கைகளை முழு வீச்சில் முடுக்கிவிடும்படி உத்தரவிட்டுள்ளேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு அறையில் சனிக்கிழமை காலை ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், என்னென்ன புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தார்.

அதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தொடர்ந்து இரண்டு மூன்று நாள்களாக மழை பெய்து கொண்டு இருக்கிறது. சனிக்கிழமை இரவு புயல் கரையைக் கடக்கும் என செய்தி வந்துள்ளது.

“கட்டுப்பாட்டு அறையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வழி ஆலோசனை நடத்தி அங்குள்ள நிலவரங்களை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டோம்.

“நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இரவு நிச்சயமாக கடும் மழை பெய்யும் என்பதால், அதற்கேற்ற வகையில் நிவாரண முகாம்கள் தயாராக உள்ளன.

“கனமழை, புயலை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. இரவு முழுவதும் மழை பெய்த போதும் சென்னையில் எங்கும் மழைநீர் தேங்கவில்லை.

“வழக்கமாக மழை நீர் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. நிவாரண நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள உத்தரவிட்டு உள்ளேன். அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது,” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

முகாம்களில் தடையின்றி உணவு வழங்க புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவு

புயல் சனிக்கிழமை இரவு கரையை கடக்கும் என்பதால் அதிகம் பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை. இருப்பினும், தேவைப்படுவோருக்கு உணவை அந்தந்த பகுதிக்கே கொண்டு சென்று கொடுக்க உத்தரவிட்டுள்ளேன் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் புயலின் தாக்கத்தால் மின்விநியோகம் தடைப்பட்டது. அதைத்தொடர்ந்து மின்துறையினர் அதைச் சரி செய்து மின்விநியோகத்தை சீராக தந்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் ரங்கசாமி புதுச்சேரியின் நிலைமையைக் காரில் சென்று ஆய்வு செய்தார். கடற்கரைச்சாலை தலைமைச்செயலகம் அருகே அவர் ஆய்வு செய்தபோது, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனும் அப்பகுதியில் ஆய்வில் இருந்தார். காரில் சென்ற முதல்வரைப் பார்த்தவுடன் ஆட்சியர் குலோத்துங்கன், நிவாரண மையங்களில் இருந்த 1,500 பேருக்கு உணவு விநியோகம் செய்துள்ளோம் என்றார்.

அதற்கு முதல்வர் ரங்கசாமி, “புயல் இரவுதான் கரையைக் கடக்கும். இப்போது அதிக மழை இல்லை. உணவு விநியோகத்தை முதலில் உறுதி செய்யுங்கள். தேவைப்படுவோருக்கு அந்தந்த பகுதிக்கும் சென்று தர நடவடிக்கை எடுங்கள். உணவு தடையின்றி தாருங்கள். மழை நீர் தற்போது எங்கும் தேங்கவில்லை,” என்றார்.

குறிப்புச் சொற்கள்