தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழகத்தில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்தது: 208 அரசு பள்ளிகள் மூடல்

2 mins read
2520782d-fc64-4a34-ba84-4520a6d6d10a
தமிழகத்தில் கடந்த 2011ல்ஆம் ஆண்டு ஒரு வயதுக்குள்ளான குழந்தைகளின் எண்ணிக்கை 10.74 லட்சமாக இருந்தது.  - படம்: ஊடகம்

சென்னை: குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்ததால், தமிழகத்தில் 208 அரசுப் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இத்தகவலை பள்ளிக்கல்வி துறை தெரிவித்தது.

அக்குறிப்பிட்ட பள்ளிகளில் புது மாணவர்கள் யாரும் சேரவில்லை என ஊடகங்களில் செய்தி வெளியாயின. இந்நிலையில், பள்ளிக்கல்வி துறை இயக்குனர் கண்ணப்பன் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது ஏறக்குறைய 59,000 பள்ளிகள் இயங்குகின்றன. இப்பள்ளிகளில் மொத்தம் 1.21 கோடி மாணவர்கள் படிக்கின்றனர் என்றும் 5.34 லட்சம் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், 208 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், 114 அரசு உதவி பெறும் பள்ளிகள், 11 பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகள், 869 சுயநிதி பள்ளிகள், இரு மத்திய பாடத்திட்ட பள்ளிகள் என மொத்தம், 1,204 பள்ளிகளில், சேர்க்கை நடக்கவில்லை என திரு கண்ணப்பன் தெரிவித்தார்.

இதற்கு, தமிழகத்தில் ஆண்டுதோறும் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவதே முக்கியக் காரணம் என்றும் அரசு, தனியார் பள்ளி என்ற பாகுபாடு காரணமல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“தமிழகத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு ஒரு வயதுக்குள்ளான குழந்தைகளின் எண்ணிக்கை 10.74 லட்சமாக இருந்தது. கடந்த 2016ல் இந்த எண்ணிக்கையானது 10.45 லட்சமாகவும், 2021ல் 9.53 லட்சமாகவும் குறைந்துள்ளது.

“அடுத்த ஆண்டு, 8.78 லட்சமாக குறையக்கூடும் என கடந்த 2020ல் வெளியிடப்பட்ட மத்திய மக்கள் தொகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி சேர்த்து, குழந்தைகள் ஆங்கில வழிக்கல்வி பெறுவதைப் பெற்றோர் பெருமையாகக் கருதும் போக்கு அதிகரித்துவிட்டது. மேலும், நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்வதும் கிராமப்புற பள்ளிகளில் சேர்க்கை குறைய காரணமாக உள்ளது. அதனால்தான், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் கட்டமைப்புகளை மேம்படுத்தியும் மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்,” என்று திரு கண்ணப்பன் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்