சென்னை: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தனியார் பள்ளி கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து குழந்தை பலியான சம்பவத்தில் பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 3ஆம் தேதி செயின்ட் மேரீஸ் தனியார் மேல்நிலைப் பள்ளியின் கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து எல்கேஜி மாணவியான ஐந்து வயது லியா லட்சுமி உயிரிழந்தார்.
இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டொமினிக்மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல் ஆகிய மூவரும் கைதாகி பிணையில் வெளியே வந்துள்ளனர். இந்த மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரது பெற்றோர் புகார் கூறி வருகின்றனர்.
விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி குழந்தையின் தந்தை பழனிவேல் மனுத் தாக்கல் செய்தார். விக்கிரவாண்டி காவல்துறையினர் விசாரணையை முறையாக நடத்தவில்லை. குழந்தை மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளதால், விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும். கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் பெறும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
சிறுமியின் தந்தை பழனிவேல் தொடர்ந்த மனு மீதான விசாரணை பிப்ரவரி 4ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் தமிழ்நாடு அரசு, காவல்துறை, சிபிஐ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.