சென்னை: போக்சோ சட்டத்தின் நோக்கம் வெறும் வழக்குகளைப் பதிவு செய்வதோ, தண்டனை பெற்றுத் தருவதோ மட்டுமல்ல என்றும் சிறார்களின் கண்ணியம், கல்வி, உளவியல் ரீதியான பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் மதுரை உயர் நீதிமன்றக் கிளை தெரிவித்துள்ளது.
போக்சோ சட்டம் பழிவாங்கும் ஆயுதமாக மாறக்கூடாது என்றும் அந்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
திருச்சி, துாத்துக்குடி, புதுக்கோட்டை, உசிலம்பட்டி போக்சோ நீதிமன்றங்களில் அச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட நான்கு வெவ்வேறு வழக்குகள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரிக்கப்பட்டபோது, நீதிபதி விக்டோரியா கவுரி பிறப்பித்த உத்தரவில் மேலும் பல முக்கியமான அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
“போக்சோ சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவது, உண்மையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நீதியை பாதிப்பதுடன் நீதிமன்ற நேரத்தையும் வீணாக்குகிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து அவர்களைப் பாதுகாக்கும் இச்சட்டம், பெரியவர்களின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கான ஆயுதமாக மாறிவிடக் கூடாது,” என்று நீதிபதி விக்டோரியா கவுரி தெரிவித்துள்ளார்.
உசிலம்பட்டியில் கிராமப் பகை, முன்விரோதம் காரணமாக போட்டிப் புகாராகப் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்றும் புதுக்கோட்டையில் கணவருக்குப் பாடம் புகட்ட மனைவியே போக்சோ சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தியது அம்பலமானது என்றும் சுட்டிக்காட்டினார்.
தமிழகத்தில் காவல் கண்காணிப்பாளர் முதல் பெண் காவலர்கள் வரையிலும், மாவட்டச் சமூக நல அலுவலர்கள், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கும் சிறார் உளவியல், அவர்களைக் கண்ணியத்துடன் கையாளும் முறை, விசாரிக்கும் முறை, பொய்ப் புகார்களைக் கையாள்வது உள்ளிட்ட போக்சோ சட்டப்பிரிவுகள் குறித்து ‘சிங்கப்பெண் விழிப்புணர்வுப் பயிற்சி’ முகாம்களை நடத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், தமிழகச் சமூக நலத்துறை, சட்டத்துறையுடன் இணைந்து தமிழக உள்துறை இந்த முகாம்களுக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

