உண்டியல் சேமிப்பை வழங்கிய சிறுவர்கள்; சீமான் நெகிழ்ச்சி

உண்டியல் சேமிப்பை வழங்கிய சிறுவர்கள்; சீமான் நெகிழ்ச்சி

1 mins read
e9a02d5a-2248-42e0-9baf-0753e22a86e2
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.  - படம்: தினமலர்

கோயம்புத்தூர்: நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கும் தேர்தல் செலவுகளுக்கும் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகளிடம் இருந்து ‘திரள்நிதி’ (Crowdfunding) வசூலிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் அறிவித்திருந்தார்.

எதிர்க்கட்சிகள் இதனை விமர்சித்தாலும், அதனைப் பொருட்படுத்தாத அக்கட்சியினர் ஒவ்வொரு கூட்டத்திலும் நிதி சேகரிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தற்போது தமிழகம் முழுவதும் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டுவரும் சீமான், “மக்களுக்காக வெயிலிலும் வீதியிலும் நின்று போராடுகிறேன்,” என்று உருக்கமாகப் பேசி வருகிறார்.

இந்நிலையில், சீமானை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாகச் சிறுவர்கள் தாங்கள் சிறுக சிறுகச் சேமித்த உண்டியல் பணத்தை திரள்நிதியாக வழங்கி வருவது சீமானை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோவையில் நடந்த பிரசாரத்தின்போது சிறுவர்கள் கொடுத்த உண்டியல்களைப் பெற்றுக்கொண்ட சீமான், அவர்களின் கைகளில் முத்தமிட்டுத் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தமிழகம் முழுவதும் பல இடங்களில் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து நிதி அளிப்பது, தேர்தல் நிதி குறித்த கவலையில் இருந்த சீமானுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்து அவர் கூறுகையில், “கட்சியில் போதிய அளவுக்கு நிதி இல்லாதது வருத்தம்தான். ஆனால், சிறுவர்கள்கூட நம் கொள்கையை ஏற்றுக்கொண்டு நிதி அளிப்பது, நாம் சரியான பாதையில் செல்வதையே காட்டுகிறது.

“அடுத்த தலைமுறையைக் காக்கும் எனது எண்ணம் பிடித்துப்போனதால்தான் அவர்கள் தங்களது சேமிப்பை வழங்குகிறார்கள்,” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்